ஊட்டி:
இந்தியாவில் அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீலகிரியில் தேயிலைதூள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலைதூள் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் குன்னூர், கொச்சி ஆகிய மையங்களில் ஏலம் விடப்படுவது வழக்கம்.
இங்கு ஏலத்தில் எடுக்கும் வியாபாரிகள் தேயிலை தூளை நாட்டின் பிறபகுதிகள் மற்றும் பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். நீலகிரி தேயிலைக்கு அதிக கிராக்கி உள்ளது.
இந்தநிலையில் மத்திய அரசு கடந்த 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதில் தேயிலை தூளுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் தேயிலை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 5 சதவீத வரி உயர்வை காரணம் காட்டி வியாபாரிகள் தேயிலை தூளை ஏலம் எடுக்க வியாபாரிகள் வரவில்லை.
இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வியாபாரி மற்றும் தோட்ட உரிமையாளர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இது குறித்து சர்வதேச நிர்வாகவியல் ஆலோசகர் ஒருவர் கூறும்போது, ஜி.எஸ்.டி. நடைமுறையால் பெரிய எஸ்டேட் நிர்வாகங்கள் இடுபொருட்கள் வரவு என 5 சதவீதத்தை கணக்கு காட்டி மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெறலாம்.
ஆனால் பல ஆண்டுகளாக பெரிய எஸ்டேட்டுகளுக்கு திருப்பி தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் இன்று வரை நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி குறைவால் தேயிலை தூள் தேக்கம் அடையும். அவ்வாறு தேக்கம் அடையும்போது தேயிலை தூள் விலை கடும் வீழ்ச்சி அடையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.