செய்திகள்

சபாநாயகரின் விருந்தை புறக்கணித்த தெலுங்கு தேச எம்.பி.க்கள்

மராட்டியர்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்காமல் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

மராட்டியர்களின் புத்தாண்டான ‘குடி பட்வா’ பிறப்பையொட்டி நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று மதியம் எம்.பி.க்களுக்கு சிறப்பு மதிய உணவு விருந்து அளித்தார். இதற்காக அவர் அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால், இந்த விருந்தில் பங்கேற்காமல் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த தெலுங்கு தேச எம்.பி.க்கள் கூறுகையில், “மோடி அரசுக்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது அவருடைய தோல்வியை காட்டுகிறது.

எதிர்க்கட்சிகளின் அமளியால் தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவேதான் சபாநாயகர் அளித்த விருந்தில் நாங்கள் பங்கேற்கவில்லை” என்றனர்.