செய்திகள்

கேரளாவில் நாளை முதல் கோவில்களில் செல்போன், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை - திருவிதாங்கூர் தேவசம் போர்டு

திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை முதல் செல்போன், பிளாஸ்டிக், பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் 1,240 கோவில்கள் உள்ளன.

கேரளாவில் உள்ள இந்த கோவில்கள் அனைத்திலும் நாளை (ஏப்ரல் 1) முதல் செல்போன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது.

இதுபற்றி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:-

கேரளாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோல கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்களை கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் அர்ச்சனை பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடமும் இது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஊதுபத்தி, சூடன், எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் விற்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். ஏற்கனவே பிளாஸ்டிக் டப்பாக்களில் இருக்கும் ஊதுபத்தி, சூடன் போன்றவற்றை டப்பாக்களில் இருந்து அகற்றி சில்லறையாக விற்கும்படி கூறி உள்ளோம்.

மேலும் நெய், எண்ணெய் போன்றவற்றை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல எவர்சில்வர் கப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். பக்தர்கள் எண்ணெய் எடுத்துச்செல்லும் எவர்சில்வர் கப்புகளை அர்ச்சனை செய்யும் பகுதியில் விட்டு வரலாம். அல்லது மீண்டும் வாங்கிய கடைகளிலேயே திருப்பி கொடுக்கலாம்.

அர்ச்சனை தட்டுகள், பொருட்களை எடுத்துச் செல்ல வாழை மட்டைகளை கொண்ட தட்டுகளை பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க கோவில்கள் அருகிலேயே குத்தகைக்கு இடம் அளிக்கவும் தயாராக உள்ளோம். குடும்பஸ்ரீ அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் மூலம் வாழை மட்டை தட்டுகள் தயாரிக்கவும் கேட்டுள்ளோம்.

ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பக்தர்கள் செல்போன் வைத்துச்செல்ல சிறிய லாக்கர் அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போல மற்ற கோவில்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கவர், தட்டுகளுடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் யாரும் நாளை முதல் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.