செய்திகள்

ஒரே ஒரு கிளிக் செய்தால் 100 டிக்கெட்டுகள் ‘தட்கல்’ முன்பதிவு முறையில் நூதன மோசடி - சி.பி.ஐ. அதிகாரி கைது

ஒரே ஒரு கிளிக் செய்தால் 100 தட்கல் டிக்கெட்டுகளை பெறும் வகையில் சாப்ட்வேரை வடிவமைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஒரே ஒரு கிளிக் செய்தால் 100 தட்கல் டிக்கெட்டுகளை பெறும் வகையில் சாப்ட்வேரை வடிவமைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ரெயிலில் பயணம் செய்ய கடைசி நேர முன்பதிவுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘தட்கல்’ முன்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ரெயிலிலும் ‘தட்கல்’ முன்பதிவுக்கென குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். பயணத்திற்கு முந்தைய நாளில் தட்கல் முன்பதிவு முறை மூலம் பயணிகள் ரெயில் டிக்கெட்டை பெறலாம்.

ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும், ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘ஐ.ஆர்.சி.டி.சி.’ மூலமாகவும் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில்தான் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை பெற முடியும்.

எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்கிற அடிப்படையில் தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. தட்கல் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். இதனால் பயணிகள் தட்கல் முன்பதிவிற்காக தனியார் ஏஜெண்டுகளை நாடுகின்றனர்.

ஏஜெண்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறும் வகையில் ரெயில்வே துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

எனினும் பல இடங்களில் ஏஜெண்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முறைகேடு செய்து அதிக எண்ணிக்கையிலான தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறுவதை ரெயில்வே துறை கண்டறிந்தது. இது குறித்து சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தியது.

இதில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கி, கம்ப்யூட்டர் மவுசில் ஒரே ஒரு கிளிக் செய்து நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் புதிய சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. அப்போது இந்த சாப்ட்வேரை வடிவமைத்தது சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் அஜய் கார்க் (வயது 35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 26-ந் தேதி இரவு அஜய் கார்க்கை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அணில் குப்தா என்பவரை உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக சி.பி.ஐ.யில் பணியாற்றி வரும் அஜய் கார்க், இதற்கு முன் ஐ.ஆர்.சி.டி.சி.யில் பணிபுரிந்து உள்ளார். அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டும், சி.பி.ஐ.யில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றியபோது தெரிந்துகொண்ட நுணுக்கத்தின் மூலமும் அவர் இப்படி ஒரு சாப்ட்வேரை வடிவமைத்து உள்ளார்.

அவர் இந்த சாப்ட்வேரை நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஏஜெண்டுகளுக்கு குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்து உள்ளார். இதுதவிர இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி ஏஜெண்டுகள் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக அவர் வாங்கி வந்து உள்ளார். அவர் மேற்கூறிய தொகைகளை நேரடியாக பணமாக பெறாமல் ‘பிட்காயின்’களாக பெற்று வந்து உள்ளார்.

அஜய் கார்க் மற்றும் அணில் குப்தாவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து டெல்லி, மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பை, உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் ஆகிய 3 நகரங்களில் 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், ரூ.89.42 லட்சம் பணம், ரூ.61.29 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்கள், 15 மடிக்கணினிகள், 52 செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அஜய் கார்க், அணில் குப்தா ஆகிய இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தட்கல் முன்பதிவு முறையில் நடந்த முறைகேடு குறித்து தகவல் அறிந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.