டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் மாடல் முன்பதிவு துவங்கியுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் சப்-கம்பாக்ட் மாடலான டாடா நெக்சன் முன்பதிவு செய்வோர் ரூ.11,000 மட்டும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டாடா நெக்சன் விலை ரூ.6.49 லட்சத்தில் துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நெக்சன் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவட்ரான் மற்றும் டீசல் மாடலில் 1.5 லிட்டர் ரெவோடார்க் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறத்தில் டாடா நெக்சன் கேபின் டூயல்டோன் நிறங்களில் அழகாக காட்சியளிக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் டியகோ மற்றும் டிகோர் மாடல்களில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.