நகைகள் கொள்ளை 
செய்திகள்

திருமங்கலம் அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 17½ பவுன் நகை கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 17½ பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மாலை மலர்

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது50), டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார்.

இவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் விசே‌ஷ நிகழ்ச்சிக்கு சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

இதனை நோட்டமிட்ட யாரோ மர்ம மனிதன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். செல்வம் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 17½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் செல்வம் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீடு பூட்டப்பட்டு கிடந்ததை நோட்டமிட்டு திட்டமிட்டே கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.