டாஸ்மாக் பணம் கொள்ளை 
செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை

பள்ளிபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மாலை மலர்

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை படைவீடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதில் அல்லிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 32) விற்பனையாளராக உள்ளார். அவருடன் தினேஷ், சரவணன் ஆகியோரும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ராஜ்குமார் கடையை பூட்டிவிட்டு மது விற்பனை தொகை ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்துடன் வெளியே வந்தார். அப்போது முககவசம் அணிந்து முகத்தை மூடியபடி 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் 4 பேரும் திடீரென ராஜ்குமாரை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். இதை தடுக்க வந்த தினேஷ், சரவணனையும் அவர்கள் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதில் ரத்தக்காயமடைந்த ராஜ்குமார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின்பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.