சென்னை:
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் திண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம், கோவில், மசூதி, ஆலயம் போன்ற வழிபாட்டு தலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 7000 மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 3000 கடைகளாக குறைந்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது. நகரில் பல இடங்களில் அடுத்தடுத்து செயல்பட்டு வந்த மதுக்கடைகள் எல்லாம் மூடப்பட்டதால் குடிப்பதற்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என்ற நிலை மாறி இப்போது கடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதால் மது பிரியர்கள் கடைகளை தேடுவதற்கே பலமணி நேரம் ஆகிவிடுகிறது. அப்படியே கடையை கண்டு பிடித்து சென்றால் கூட அங்கு திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
12 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே ஒவ்வொரு கடைகள் முன்பும் கூட்டம் தவமாய் கிடக்கிறது. கடை திறந்தவுடன் அடித்து பிடித்து தெறித்து கொண்டு சரக்கை வாங்குவதில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இந்த காட்சியை சென்னையில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும் காண முடிகிறது.
7 மணிக்கு மேல் அளவுக்கு அதிகமான கூட்டம் நிரம்பி வருகிறது. பார்களில் உட்காருவதற்கு இடம் கிடைப்பது இல்லை. சிலர் நின்று கொண்டே சில நிமிடங்களில் மது அருந்தி விட்டு சென்று விடுகின்றனர்.
ஆனால் பெரும்பாலானவர்கள் உட்கார்ந்து ஜாலியாக பேசிக் கொண்டே மது அருந்துவதால் இடம் பிடிப்பதற்கு நிற்க வேண்டியுள்ளது. இரவு 10 மணி நெருங்க நெருங்க மது பிரியர்களின் கூட்டத்தை ஊழியர்களால் சமாளிக்க முடிவதில்லை.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏ.சி. பார்களை அதிகம் நாடுகிறார்கள். ஜில்லென குளிரூட்டப்பட்ட பீர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் ஜில் பீர்கள் கிடைப்பதில்லை. அதிகளவு விற்பனை ஆவதால் குளிரூட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் சுருங்கியதால் மதுபிரியர்கள் ஓட்டல்களுடன் இணைந்த பார்களுக்கு அதிகளவில் படையெடுக்கிறார்கள். நட்சத்திர ஓட்டல் சார்ந்து நடத்தப்படும் ஏ.சி. பார்களில் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
அதனால் மதுவகை விலை உயர்வாக இருந்தாலும் பரவாயில்லை டென்சன் இல்லாமல் சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். இதுபோன்ற பார்களில் ‘ஸ்நாக்ஸ்’ இலவசமாக வழங்கப்படுவதால் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட எல்லா மதுபானங்களின் விலையும் உயர்வாக இருக்கும்.
ஆனால் டாஸ்மாக் கடைகளை தேடி அலைய வேண்டியிருப்பதால் ஓட்டல்களுடன் கூடிய பார்களுக்கு செல்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டதால் மதுபிரியர்களின் அலைந்து திரிவதை பார்த்து பார்-ஓட்டல் நிர்வாகமும் புதிய நடைமுறையை பின்பற்றுகிறது.
அங்கு விற்பனை செய்யப் படும் மது பானங்களின் விலையை குறைத்துள்ளது. அதற்கு மாறாக வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு உணவு பொருளுக்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஏ.சி. பார்களில் குறைந்த விலையில் மது விற்கப்படுவதால் கூட்டம் அலை மோதுகிறது.
சென்னையில் புதிய மது விற்பனை யுக்தியை ஓட்டல்களுடன் இணைந்த பார்கள் பின்பற்றுவதால் மதுப்பிரியர்கள் கூடுதல் செலவை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சி யுடன் செல்கிறார்கள்.