நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் கருங்குளத்தை அடுத்த கொட்டநேரியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). பாஸ்கருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்,
இவர் நாங்குநேரியை அடுத்த பரப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஆரல்வாய்மொழியை அடுத்த அழகிய நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பாஸ்கர் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இரவு தூங்கசென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே பாஸ்கரை அவரது மனைவி சரஸ்வதி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாஸ்கர் இறந்து போனார்.
இது பற்றி சரஸ்வதி, கணவரின் தந்தை துரைராஜ் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பாஸ்கரின் உடலை பார்த்த அவரது தந்தை துரைராஜ், மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதினார்.
இது பற்றி அவர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை கிடைத்த பின்பே, பாஸ்கர் இறந்தது எப்படி? என்பது தெரியவரும்.