செய்திகள்

மதுபானக்கடைக்கு 1–ந் தேதி பூட்டு போடும் போராட்டம்: விளம்பர பதாகையால் பரபரப்பு

குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடைக்கு வருகிற 1–ந் தேதி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை:

குளித்தலை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மதுபானம் வாங்க வருபவர்களில் சிலர் அப்பதியில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், வீட்டு வாசலிலும் உட்கார்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மதுபாட்டில்களை வீட்டின் முன்பு உடைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அங்குள்ள பாரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் குடிமகன்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு தகராறு செய்துகொள்வதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இங்குள்ள மதுபானக்கடையை அகற்றவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கடந்த 7–ந் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பின்னர் கடந்த 9–ந் தேதி மதுபானக்கடை மற்றும் பாரை அகற்றவேண்டுமென கூறி மதுபானக்கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் அருள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மது அருந்தும் பார் நிரந்தரமாக மூடப்படும். ஒரு மாத காலத்திற்குள் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை வேறு இடத்திற்கு மாற்றப்படுமென உறுதியளித்தார். இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் இக்கடை மாற்றப்படாவிட்டால் வருகிற (ஜூன்) 1–ந் தேதி இக்கடைக்கு பூட்டு போடப்படும் என்று பொதுமக்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில், இந்த மதுபானக்கடையை அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுக்காவிட்டால் நாளை (வியாழக்கிழமை) மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 16, 21–வது வார்டு பொதுமக்கள் சார்பில் நேற்று விளம்பர பதாகை ஒன்று ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடை முன்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.