அரசின் வருமானத்தில் முக்கிய அங்கம் வகிப்பது டாஸ்மாக் நிறுவனம். தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்த அரசு நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் மதுக்கடைகள், பார்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் சாலை விபத்திற்கு மதுபானம் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேலான கடைகள் மூடப்பட்டன.
மேலும் டாஸ்மாக் மீது விற்பனை நேரமும் குறைக்கப்பட்டது. இதனால் மது விற்பனை குறைந்து வருவாயும் சரிந்தது. இதனை சரிகட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டன.
பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால் வருவாய் இழப்பு சரி செய்யப்பட்டது. இப்போது பீர் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அனைத்து பீர் வகைகளும் ரூ.10 விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிப்பதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று ‘குடி’மக்கள் கவலைப்படுகின்றனர். கம்ப்யூட்டர் பில் முறையை அறிமுகப்படுத்தினாலும் முறையாக பில் தருவதில்லை. எல்லாம் பெயரளவில்தான் உள்ளது.