குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சமுத்து(வயது 40). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(38). இவர் குன்னம் அருகே பரவாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் சரவணனுக்கு உதவியாளராக பச்சமுத்து வேலை பார்த்து வருகிறார்.
தினமும் மாலை 6 மணி வரை கடையில் வசூலாகும் பணத்தை சரவணன் வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். அதன்பின்னர் கடை மூடும் நேரம் வரை வசூலாகும் பணத்தை பச்சமுத்து பெற்றுச்செல்வார். அவ்வாறு வீட்டிற்கு எடுத்து செல்லப்படும் பணத்தை சரவணன் மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
இதேபோல் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் காலை முதல் மாலை 6 மணி வரை மதுபாட்டில்கள் விற்பனை மூலம் வசூலான தொகை ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்தை சரவணன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் கடை மூடும் வரை விற்பனையான தொகை ரூ.72 ஆயிரத்தை, இரவில் அந்த கடையின் விற்பனையாளர் ஆறுமுகம், பச்சமுத்துவிடம் ஒப்படைத்தார். பச்சமுத்து அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி சென்றார்.
குன்னம் செல்லும் வழியில் அந்தூர் கோழிப்பண்ணை அருகே சென்ற போது, 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் அவரை வழிமறித்து, பச்சமுத்துவின் முகத்தில் மிளகாய்பொடியை வீசி உள்ளனர். மேலும் அவரை வெட்டப்போவதாக மிரட்டியதால், பச்சமுத்து உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு காட்டிற்குள் ஓடினார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் 4 பேரும், பச்சமுத்துவின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.72 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு, 4 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் குன்னம் வழியாக அரியலூர் நோக்கி சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பச்சமுத்து குன்னம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
டாஸ்மாக் கடையில் நாள் முழுவதும் வசூலான பணத்தை பச்சமுத்து எடுத்துக்கொண்டு வருவதாகவே எண்ணி, மர்ம நபர்கள் 4 பேரும் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.