செய்திகள்

2ஜி வழக்கில் நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து விலக்கினர்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

2ஜி வழக்கில் நேர்மையான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர்களை குறிவைத்து வழக்கில் இருந்து விலக்கியதாகவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

ஆறு ஆண்டுகளாக நடைபெறு வந்த 2ஜி வழக்கில் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டி வருமாறு:-

2ஜி வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் சரியாக நடவடிக்கை எடுக்காததே இன்றைய தீர்ப்புக்கு காரணம்.


இந்த வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை  வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை. இதுதவிர இந்த வழக்கில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து இந்த வழக்கில் இருந்து விலக்கினர்.  

இந்த தீர்ப்பினால் 2ஜி அலைக்கற்றை வழக்கில் பின்னடைவு ஏற்படவில்லை. வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது தீவிரமாக இல்லை. 2ஜி முறைகேடு தொடர்பாக நான்  தான் முதலில் நீதிமன்றத்தில் மனு அளித்தேன். காங்கிரஸ் அரசு  சிபிஐ மூலம் தனியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். வழக்கு முறையாக கையாளப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.