செய்திகள்

மராட்டியத்தில் கோர விபத்து: நண்பரின் திருமணத்திற்கு சென்று திரும்பிய 7 ஐ.டி ஊழியர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் டேங்கர் லாரி - மினி பஸ் மோதிய விபத்தில் நண்பரின் திருமணத்திற்கு சென்று திரும்பிய 7 ஐ.டி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

மும்பை:

மராட்டியம் மாநிலம் புனே நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் பொறியாளர்கள், தங்களது நண்பரின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று மினி பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். புனே - அகமதாபாத் சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது, லோனிகந்த் என்ற கிராமத்தின் அருகே சாலையின் எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று மினி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மினி பஸ்ஸில் இருந்த 6 ஐ.டி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாறுமாறாக லாரி ஓட்டிய டிரைவரை கைது செய்தனர்.

டேங்கர் லாரியானது மினி பஸ் மீது மோதியது மட்டுமல்லாமல், மினி பஸ்சின் பின்புறம் நின்று கொண்டிருந்த கார் மீதும் மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.