செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் கோபுர சீரமைப்பு பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் கோபுர சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பில் பழமை மாறாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய உலகப்புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. கட்டிடக் கலைக்கு சிறப்பு பெற்ற இந்த பிரமாண்ட கோவில் கட்டி 1000 ஆண்டுகளை கடந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

கோடை விடுமுறையை யொட்டி தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தந்தனர். தற்போது கோடை விடுமறை முடிந்தும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூலவர் சன்னதியில் அமைந்துள்ள பிரமாண்ட கோபுரத்தில் சாரம் கட்டி அதனை சுத்தப்படுத்தி சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பில் பழமை மாறாமல் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்கு தடையின்றி செய்யும் வகையில் கோபுரத்தை சுற்றி பிரகாரத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோபுர பணியின்போது சிறு கற்கள் விழுந்தால் அது பக்தர்கள் மீது விழாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோபுரத்தில் புறாக்களும், வவ்வால்களும் வசித்து வருகின்றன. அவைகள் இரைத்தேட சென்றதும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் அதிக சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் சுமார் 6 மாதங்களுக்கு பிறகே கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. வரும் 2020-ம் ஆண்டு பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தஞ்சை நகர மக்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் வரலாற்று சின்னமாக தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது. அதனால் மிகுந்த கவனமுடன் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கோவில் பிரகாரத்தில் உள்ள சிவலிங்க சன்னதிகளையும் பக்தர்கள் வழிபடவும், விளக்கேற்றவும் வசதி செய்ய வேண்டும். முருகன் சன்னதி முன்புள்ள மண்டபத்தை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

பிரகாரத்தில் தூய குடிநீர் வசதி, மின்விளக்கு வசதியை மேம்படுத்த வேண்டும். தீர்த்த கிணறுகளை பராமரிக்க வேண்டும். அன்னதான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பூலிகை ஓவியங்கள், கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.