தஞ்சாவூர்:
தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (1-ந் தேதி) மாலை தஞ்சைக்கு வருகிறார்.
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் இன்று மாலை நடைபெறும் சலங்கை நாதம் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நாளை (2-ந்தேதி) காலை தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை கவர்னர் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நிறுவனரான மறைந்த எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடைய மார்பளவு வெண்கலசிலை பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
2 அடி உயர மேடையில் 4½ அடி பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல் 2½ அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் பங்களிப்பான ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்து ‘‘பாரத ரத்னா எம்.ஜி.ஆர். - பன்முகப்பார்வை’’என்னும் நூலினை வெளியிட்டு பேசுகிறார்.
இந்த நூலினை தமிழ்ப் பல்கலைக்கழக பணியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் எழுதி உள்ளனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, பாண்டியராஜன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதன்பின்னர் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை தஞ்சை அரசினர் சுற்றுலா மாளிகையில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று கொள்கிறார். தொடர்ந்து திருவையாறு தியாகராஜரின் ஆராதனை விழாவில் கலந்து கொள்கிறார்.
கவர்னர் தஞ்சை வருகையையொட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews