செய்திகள்

தஞ்சை அருகே சரக்கு ஆட்டோ மோதி 2 பேர் பலி

தஞ்சை அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் முத்தலீப். இவருடைய மகன் சாதிக்பாட்சா (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா மகன் ஜெய்லானி (வயது38). இவர்கள் இருவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.

நேற்று இரவு சாதிக்பாட்சாவும், ஜெய்லானியும் ஒரு மொபட்டில் பண்டாரவாடையிலிருந்து அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மொபட்டை ஜெய்லானி ஓட்டினார்.

இவர்கள் இருவரும் நெடுந்தெரு பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது எதிரில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சாதிக்பாட்சா, ஜெய்லானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT