செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்கா பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், 7-வது சம்பள உயர்வை அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் சாலைமறியல் போராட்டங்களில் இன்று முதல் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க வட்ட தலைவர் ரகு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க வட்ட தலைவர் பாஸ்கரன், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ராமச்சந்திரன் உள்ளட பலர் கலந்து கொண்டனர். அவர்களை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்கா பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.