தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33). தஞ்சை கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
சரண்யாவும் தஞ்சை கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வக்கீல் சரண்யாவை அவரது கணவர் வீட்டினர் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி நேற்று இரவு முதல் தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சரண்யா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு முழுவதும் விடிய விடிய தர்ணா நடத்திய சரண்யா இன்று காலையிலும் 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தார்.
பெண் வக்கீல் கோர்ட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதால் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை போராட்டம் நடத்திய சரண்யா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் என்னுடைய கணவரும் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக எனது கணவர் வீட்டில் உள்ளவர்களுக்கு என் மீது கோபம் வர தொடங்கியது.
என் மீது பொய்யான திருட்டு பட்டம் சாட்டினர். மேலும் என்னை அடித்து சித்ரவதை செய்தனர். இதை என் கணவரும் தடுக்க வில்லை. இதனால் நான் பெரும் மன வேதனைக்கு ஆளானேன். என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் தற்போது எனது அம்மா வீட்டில் வசித்து வந்தேன். அதன் பின் எனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தஞ்சை கோர்ட்டில் மனு கொடுத்துள்ளேன்.
ஆனால் எனது கணவரும் பயிற்சி வக்கீலாக உள்ளதால் எனது மனுவினை தடுத்து நிறுத்தி உள்ளார். நான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நேற்று மாலையில் முதல் தஞ்சை கோர்ட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews