ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வரியை நீக்கக்கோரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உரிமைக்குரல் டிரைவர்கள் சங்கம் சார்பில் சாலை வரியை முழுமையாக நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உரிமைக்குரல் டிரைவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்காரம் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட சாலைவரியை முற்றிலும் நீக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வாகன தவணைகளுக்கு விதிக்கப்பட்ட வட்டி மற்றும் அபராதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 2020 மார்ச் மாதத்திற்கு முன்பு வாகன தவணைகளில் நிலுவைகள் இருந்தால் அவைகளை செலுத்துவதற்கு முழு ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மீறும் நிதி நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் பேட்ஜ் வைத்துள்ள அனைத்து டிரைவர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். காலாவதியான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு ஊரடங்கு முழு தளர்வு ஏற்படும் வரை அவகாசம் வழங்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாட்களை கணக்கில் எடுத்து வாகன இன்சூரன்சை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். அல்லது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் டிரைவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டரை சந்தித்து மனுவும் அளித்தனர்.