தமிழக செய்திகள்

வீட்டு பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்

"அச்சே தின்" என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தியுள்ளனர்"

நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.913 லிருந்து ரூ.942 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளூர் வரி மற்றும் போக்குவரத்து செலவுகளில் உள்ள வேறுபாடு காரணமாக மற்ற நகரங்களில் விலை மாறுபடலாம் என கூறப்படுகிறது. கடந்த மார்ச் 7-ஆம் தேதி வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்ந்திருப்பது குடும்பத் தலைவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி என மக்கள் தவிக்கும் நிலையில் இந்த கூடுதல் சுமை ஏற்றுக்கொள்ள முடியாது. "அச்சே தின்" என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தியுள்ளனர்". இந்த அநியாயமான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT