கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து விராலிமலை, கரூர் தொகுதிகளில் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் முன்னதாகவே இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே விட்டதை பிடிக்க தி.மு.க.வும், சரிந்த செல்வாக்கை மீட்க அ.தி.மு.க.வும் தீவிரமாக களம் இறங்க தயாராகி வருகின்றன.
விராலிமலையில் த.வெ.க. சார்பில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சி.விஜயபாஸ்கர் தினந்தோறும் மக்களை சந்தித்து வருகிறார். முதல்வர் விஜய்யை புகழ்ந்து அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கரூரில் த.வெ.க. சார்பில் போட்டியிட தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியுடன் கூறி வருகிறார்.
இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட களம் இறங்க தயாராகி வருபவர்களும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். மத்திய மண்டலத்தில் உள்ள இன்னொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு பின்னர் ராஜினாமா செய்த தொகுதியாகும். இந்த தொகுதியிலும் களம் காண ஆயத்தமாகி வரும் த.வெ.க.வின் சில முக்கிய பிரபலங்கள் சீட்டு பெறுவதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இந்த 3 தொகுதிகளிலும் வெற்றி தங்களுக்கே என த.வெ.க.வினரும், கடந்த பொதுத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல், தக்க வைத்துக் கொண்டதால், இன்னும் சற்று கடுமையாக உழைத்தால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வினரும், சரிந்த செல்வாக்கை இந்த இடைத்தேர்தல்களில் தூக்கி நிறுத்தினால்தான் எதிர்காலம் உள்ளது என்ற உறுதியில் அ.தி.மு.க.வினரும் காத்திருக்கின்றனர்.
விராலிமலை தொகுதி முழுவதும் த.வெ.க.வின் ‘விசில்’ சின்னத்தை சுவர்களில் வரைந்து ஆரவாரம் செய்து வரும் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், தாராபுரம் தொகுதியில் அவர் பம்பரமாய் சுற்றி வேலை பார்த்ததால், அவரது உழைப்பை கட்சித் தலைமை பாராட்டியதாகவும், இதனால் விராலிமலை தொகுதி விஜயபாஸ்கருக்கே கிடைக்கும் என்றும், வெற்றியும் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் முழங்குகின்றனர்.