தமிழக செய்திகள்

லாரி மோதியதில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மின் கம்பம்

லாரி சாலையோரத்தில் இருந்த இரும்பு மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

நெடுஞ்சாலை

இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் திருவள்ளூர் அருேக முருக்கஞ்சேரி கிராமம் சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி லாரி ஒன்று வந்தது.

லாரி விபத்து

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த இரும்பு மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. லாரி மோதிய வேகத்தில் அந்த மின்கம்பம் சரிந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் விழுந்தது.

பொதுமக்கள் ஓட்டம்

அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேய போட்டு விட்டு அலறியடித்து ஓடினர். மேலும் மின்கம்பம் சரிந்து விழுந்த இடம் அருகே பஸ்நிறுத்தம் இருந்தது. அதில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு

நடுரோட்டில் மின்கம்பமும், மின்கம்பிகளும் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பம் சரிந்து விழுந்தபோது சாலையில் மற்ற வாகனங்கள் எதுவும் செல்லாததாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

மின் ஊழியர்கள்

தகவல் அறிந்ததும் கூடப்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ஜே.சி.பி.எந்திரத்தின் உதவியுடன் சாலையில் கிடந்த மின்கம்பத்தை அகற்றி மின்கம்பிகளை துண்டித்தனர்.

கிராமங்கள்

மின்கம்பம் சரிந்த போது அருகில் இருந்த மேலும் 2 மின்கம்பங்களும் வளைந்து சேதம் அடைந்து உள்ளன. அதனையும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக புட்லூர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், முருக்கஞ்சேரி, திருவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் விசாரணை

நடுரோட்டில் மின்கம்பம் சரிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணவாளநகர் போலீசார் மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்வாரிய அதிகாரிகள்

சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் சீராக இன்று மாலை ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பம் சரிந்து விழுந்த சம்ப வத்தால் அப்பகுதி இன்று காலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.