தமிழக செய்திகள்

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த இளம்பெண்

தற்போது பிறந்த பெண் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த இளம்பெண் ஒருவர், கடுமையான ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தளவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சசிகலா.

இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சசிகலா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார்.

கடந்த 24 ஆம் தேதி சசிகலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல், யூடியூப் இணையதளத்தில் பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. சசிகலாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அதிதீவிர ரத்தப்போக்கு..

குழந்தை பிறந்த சில நிமிடங்களில், சசிகலாவிற்கு நஞ்சுக்கொடி சரியாக வெளியேறாததால் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சசிகலாவின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் அதிரடி சோதனை..

இது குறித்து தகவலறிந்த ஊத்துக்குளி காவல் நிலைய போலீசாரும், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி, யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நல்வாய்ப்பாக பிறந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த இந்த காலத்தில், தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது தாயின் உயிருக்கே விபரீதமாக முடியும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT