திருவள்ளூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது50). இவர் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (42).
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை மொபட்டில் அலமாதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே வந்த போது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு சங்கீதா பரிதாபமாக இறந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுந்தரம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.