தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமாகவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் வைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆற்றில் நீர்வரத்து இருக்கும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் நீர் பெருக்கெடுக்கும். இதனால் இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக நடைபெறும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்யவில்லை. அதேசமயம் நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கமும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. மழையின்மை மற்றும் கடும் வெயில் காரணமாக மூலவைகை ஆறு தற்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் முழுமையாக வறண்டு மணல்வெளியாக காட்சியளிக்கிறது.
தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து, தற்போது அபாய நிலையை எட்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே இந்த உறை கிணறுகளில் இருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. பசு, எருமை, ஆடு என ஆயிரக்கணக்கான கால்நடைகளை மக்கள் வளர்த்து வருகின்றனர்.
தற்போது ஆறு வறண்டு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாமல் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய தண்ணீர் இன்றி கால்நடைகள் சோர்வடைந்து வருவதால் அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது. வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் உச்சத்தை தொடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே உறை கிணறுகளில் நீர்மட்டம் முற்றிலுமாக வற்றிப்போகும் முன்பாகவே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தவறவிட்டால், கடமலை-மயிலை ஒன்றியம் முழுவதும் வரலாறு காணாத கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 22.44 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. குடிநீர் திட்டங்களுக்காக 89 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 147 மி.கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.35 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 240 கனஅடி நீர் முழுவதும் தமிழக பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. அணையில் 1126 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.