சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது பழிக்குப்பழி வாங்குவதற்காக நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தேசிய நெடுஞ் சாலைப் பகுதியில் பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. செயல்படாமல் மூடப்பட்ட நிலையில் இருக்கும் இங்கு இரவு, பகல் பாராமல் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பகல் நேரங்களில் மதுபான கூடமாகவும், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது.
இந்த வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டும், முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதி முழுவதும் ஏராளமான மது பாட்டில்கள் சிதறிக்கிடந்தன.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குட்டிச்சாக்கு என்ற சூர்யா (வயது 26) என்பதும், அவருக்கு திருமணமாகி ஜான்சி என்ற மனைவி உள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சூர்யாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரித்திர பதிவேடு கொண்ட பிரபல ரவுடியாக வலம் வந்த சூர்யா மீது, சமயநல்லூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு பழைய ஊராட்சி மன்றக் கட்டிட வளாகத்தில் சூர்யா மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவரது முகம் சிதைக்கப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது பழிக்குப்பழி வாங்குவதற்காக நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட் டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடக்கிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் சமயநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.