தமிழக செய்திகள்

பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் குடும்பத்துடன் மறியல் போராட்டம் இன்று நடந்தது. மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகிலுள்ள பணிமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த அரசு மின்சார பஸ் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும், மின்சார பஸ்களை தனியாரிடம் ஒப்படைப்பதை வாபஸ் பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டம்

சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் சவுந்தர் ராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.

பணி மனை முன்பிருந்து பல்லவன் இல்லத்தை நோக்கி வந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

த.வெ.க. அரசு தனியார் மயத்தை கைவிட்டு போக்கு வரத்து தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும், தனியாரிடம் இருந்து பணிமனைகளை மீட்க வேண்டும், புதிதாக மின்சார பஸ்களை கொள்முதல் செய்வது ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மறியல்

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மடக்கினார்கள்.

ஆனாலும் தொழிலாளர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸ் தடையை மீறி பல்லவன் சாலையில் அமர்ந்தனர்.

பின்னர் மவுண்ட் ரோடு சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் கூட போக்குவரத்து தொழிலாளர்கள் அதை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மவுண்ட் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்லவன் சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தொழிலாளர் போராட்டத்தையொட்டி பல்லவன் இல்லம் தலைமை அலுவலகம் மற்றும் பணிமனை போன்றவற்றின் நுழைவு கதவுகள் மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT