திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் நந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன். மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் காட்சிகளை தனது செல்போனில் பார்க்கும் வசதியையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்த தர்மேந்திரன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை செல்போனில் பார்த்தார்.
அப்போது பூட்டியிருந்து வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் புகுந்து திருடும் காட்சிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வினாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடு புகுந்து திருடி கொண்டு இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீபன் (19) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் இதுபோல் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.