தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 6,275 பேர் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2026-ம் ஆண்டில் 1,75,025 ஹஜ் பயணிகள் இந்தியாவில் இருந்து ஹஜ் செல்ல சவுதி அரேபியா உடன் இந்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாநிலங்களில் இருந்து ஹஜ் பயணிகள் செல்கிறார்கள்.
தமிழ் நாட்டில் இருந்து ஹஜ் செல்ல 10,800 ஹஜ் பயணிகள் மனு கொடுத்திருந்தனர். அதில் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள மும்பை ஹஜ் கமிட்டி 6275 தமிழக ஹஜ் பயணிகளை தேர்வு செய்து உள்ளனர்.
எனவே தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில் 6275 ஹஜ் பயணிகள் 16 விமானங்களில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணமாகின்றார்கள்.
முதல் விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து வருகிற 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு ஹஜ் பயணிகளை ஏற்றி செல்லுகின்றது. மே 19-ந் தேதி கடைசி விமானமாகும். பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விமான பயண தேதியில் 6 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.