தமிழக செய்திகள்

தமிழகத்தில் 10-ந்தேதியில் இருந்து வெப்ப அலை வீசக்கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

சென்னை:

சென்னை உள்பட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயில் காலம் தொடங்கி விட்டதால் மார்ச் மாதமே வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் சாதாரண அளவை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது வெப்பத்தில் இருந்து ஓரளவு நிவாரணத்தை வழங்கக்கூடும் என்றாலும் வடக்கு மற்றும் கடலோர தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் உள் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் சாதாரணத்தை விட அதிகமான வெப்ப அலை வீசக்கூடும். இதனால் வெப்ப அழுத்தம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்த மாதத்தில் தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் ஏற்படக்கூடும். வருகிற 10-ந்தேதிக்கு மேல் மாநிலம் முழுவதும் அதிகபட்ச (பகல்) மற்றும் குறைந்தபட்ச (இரவு) வெப்ப நிலை நிலவும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் வெயில் சற்று குறைந்து காணப்படும்.

10-ந்தேதியில் இருந்து கடலோர வடக்கு தமிழ்நாடு, வடகடலோர மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருக்கும். அதாவது சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.

இந்த மாதம் வழக்கத்தை விட அதிக வெப்பமானதாக இருக்கும். மழை இடையிடையே நிவாரணம் அளித்தாலும் வெப்பத்தால் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வானிலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.