தமிழக செய்திகள்

சோழவந்தானில் இன்று காலை வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசும் போது அவரது தலையிலும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியது அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் வீடுகளை பூட்டி தூங்க சென்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்தநிலையில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தெருவின் முன்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் திடீரென அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் இந்த சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது வீட்டின் சுவற்றில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியதில் எரிபொருள் ஆங்காங்கே சிதறி தீப்பிடித்து எரிந்தது. மேலும் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலும் லேசாக தீ பற்றியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

சி.சி.டி.வி. கேமரா ஆய்வு

பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசும் போது அவரது தலையிலும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியது அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முன் விரோதத்தால் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தற்போதும் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கேன்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் நபர்கள் யார், எதற்காக வாங்கி சென்றனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சோழ வந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT