கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்.
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (57). இவர் அந்த பகுதியில் வெள்ளிபட்டறை மற்றும் வெள்ளி விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்த பட்டறையில் கடந்த 12-ந் தேதி முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் புகுந்தது. அப்போது அங்கிருந்த காவலாளி வெங்கடேசனை இரும்பு ராடால் தாக்கிய அந்த கும்பல் வெள்ளி பொருட்கள் கடையில் இருந்த 550 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றது.
இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் துணை கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கொள்ளை வழக்கில் முக்கிய நபரான கோவையை சேர்ந்த அபிஷேக் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கோவை வேதாம்பாள்நகரை சேர்ந்த ஸ்ரீதர் (20), கோவை கங்கை நகர் ஞானபிரகாஷ் (28), கோவை ரத்தினபுரம் பகுதி அண்ணாமலை (28), வடக்கு நல்லம்பாளையம் பகுதி அருண்குமார் (29) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 323 கிலோ வெள்ளி பொருட்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அபிஷேக் கோவை சிறையில் இருந்த போது சேலத்தை சேர்ந்த கொள்ளையர்களுடன் தொடர்பு ஏற்பட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிக்கியது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறியதாவது-
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து விட்டு ஹார்டு டிஸ்கையும் உடைத்து சென்று விட்டனர்.
இந்த தனிப்படையில் தொழில் நுட்பம் தொடர்பான அறிவார்ந்த போலீசாரும் சேர்க்கப்பட்டு 11 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றினர். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சேலத்தில் இருந்து மதுரை மற்றும் கோவை வரை சாலைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தோம். இந்த வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் குறித்தும் ஆய்வு செய்தோம். அப்போது குற்றவாளிகள் 2 கார்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.
அந்த கார்களை தேடிய போது கொள்ளையர்கள் அந்த கார்களில் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றியது தெரிய வந்தது. இவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒரு இடத்தில் கூட சுங்க சாவடியை பயன்படுத்த வில்லை. இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது .
ஒரே ஒரு இடத்தில் மட்டும் சுமார் இரண்டரை மணி நேரம் கார் நின்றிருந்தது. அதன் மூலமாக கொள்ளையர்களை நெருங்கி மடக்கி பிடித்தோம். பிடிபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அபிஷேக் ஏற்கனவே கோவையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளார். இதே போல மேலும் பலரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
எனவே கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். வெள்ளி பொருட்கள் கடையில் லாக்கர் மற்றும் அலாரம் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போல கொள்ளை சம்பவங்கள் நடப்பது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறையில் அடைப்பு
தொடர்ந்து 5 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.