தமிழக செய்திகள்

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் விரட்டிய மக்களை மிரட்டிய யானை

குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அங்குள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகின்றன.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு யானை கூடலூர்-கேரளம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிப்படி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அந்த சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.

கூடலூர்

கூடலூர் நெடுஞ்சாலையில் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகனஓட்டிகள் உடனடியாக வாகனங்களை பின்னோக்கி இயக்கி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யானை

இதற்கிடையே கூடலூர் நெடுஞ்சாலையில் ஒற்றை யானையை கண்ட பொதுமக்கள் உயரமான கட்டிடங்களில் நின்றுகொண்டு பெரிதாக சத்தம் எழுப்பி சாலையில் உலாவந்த யானையை விரட்ட முயன்றனர். இதனால் மிரண்டு போன யானை ஆக்ரோஷத்துடன் கூச்சலிட்ட மக்களை நோக்கி பாய்ந்து வந்தது. தொடர்ந்து சாலையில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானை, பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஓடி சென்றது.

வாகன போக்குவரத்து

இதனால் பள்ளிப்படி பகுதியை சேர்ந்த பொது மக்கள் தற்காலிக நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து கூடலூர் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.

கூடலூர் நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை அங்குள்ள பொதுமக்களை ஆக்ரோஷத்துடன் தாக்க பாய்ந்து வந்த சம்பவம், கிராமத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

யானைகள் நடமாட்டம்

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை நெடுஞ்சாலை பகுதியில் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அங்குள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகின்றன.

விவசாய தோட்டம்

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளால் அங்கு மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

வனத்துறை அதிகாரிகள்

எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மேலும் மலையடிவார பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நிற்கும் யானைகள் கூட்டத்தை அடர்வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.