யானை 
தமிழக செய்திகள்

கிராமத்துக்குள் புகுந்த ஆட்கொல்லி யானையால் பொதுமக்கள் பீதி

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைவது விவசாய நிலங்கள், பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனிதர்களை தாக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

ஆட்கொல்லி யானை

இந்நிலையில் ஆசனூர் அருகே தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட ராமரனை பகுதியில் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆட்கொல்லி யானை ஊருக்குள் புகுந்தது. யானை ஊருக்குள் நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர்

அதன் பேரில் வனத்துறையினர் ராமரனை கிராமத்துக்கு வந்தனர். யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

இதே யானை தான் கடந்த ஜூன் மாதம் 4 -ம் தேதி நள்ளிரவில் அதை ஊரைச் சேர்ந்த காலன் என்கிற விவசாயியை மிதித்து கொன்றது. இந்த ஆட்கொல்லி யானை கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக இந்த யானையை அடர்ந்தவனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது

ஆசனூர் தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட ராமரனை பகுதியில் ஆட்கொல்லி யானை புகுந்தது நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டோம். எனினும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.