ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 389 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவாடானையில் 80, ராமநாதபுரத்தில் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் இந்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ராமநாதபுரம் பாரதி நகர், பழைய பேருந்து நிலையம், கேணிக்கரை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதி போன்ற பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.
வாகன ஓட்டிகளுடன், பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், நோயாளிகள் என பலரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மழை நீர் தேங்காதவாறு சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ராமேசுவரத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை கொட்டி தீர்த்தத்தால் ராமநாதசுவாமி கோவில் பிரகாரங்கள், சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி வளாகம் மற்றும் ரத வீதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி பக்தர்கள் அவதி அடைந்தனர்.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளை தண்ணீரில் இழுத்து சென்றவாறு தரிசனம் மேற் கொண்டனர். முதியவர்கள் தேங்கிய தண்ணீரில் நடக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மழைநீர் கோவிலில் இருந்து வெளியே செல்ல மழை நீர் வடிகால் தூர்வாராமலும், முறையான நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் கோவிலுக்குள் தேங்கியதாகவும் பக்தர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தேந்தல் வழியாக கொத்தங்குளம் கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் காற்றின் காரணமாக மூன்று பனை மரங்கள் வேரோடு கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமநாதபுரத்திலிருந்து புத்தேந்தல் வழியாக செல்லக்கூடிய கொத்தங்குளம், எக்ககுடி, நல்லாங்குடி, உத்தரகோசமங்கை செல்லக்கூடிய சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலையில் விழுந்த பனைமரங்களை அப்புறப்படுத்தும் வரை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நேற்று இரவு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விதைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் முளைத்து வருவதற்கு ஏதுவாக இந்த மலை அமையும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 47). இவர் தனது கிராமத்தில் உள்ள சொந்த வயல்காட்டில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது திடீரென்று மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், இடி-மின்னல் ஏற்படும் சமயங்களில் யாரும் வயல்வெளிகள் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 389 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவாடானையில் 80, ராமநாதபுரத்தில் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.