தமிழக செய்திகள்

கணவருடனான பிரச்சினையை குறிசொல்லி தீர்ப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.76 லட்சம் பணம்-நகைகள் மோசடி

4 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியல் அருகே திக்கணங்கோடு மத்திகோடு நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு ஜெபராஜ். இவரது மனைவி மினிஷா (வயது34). இவர் குமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்தப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனவருத்தத்தில் இருந்து வந்தேன். அப்போது நெய்யூர் மேக்கோட்டை சேர்ந்த ஷாலினி, திங்கள்நகரை சேர்ந்த ஜஸ்டிஸ், திருநயினார் குறிச்சியைச் சேர்ந்த ரேவதி, இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் ஆகிய 7 பேரும் குறி சொல்லி உனது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார்கள்.

பணம்

இதைத்தொடர்ந்து கிருஷ்ண பிரசாத் என் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னுடைய வீட்டு பத்திரத்தை வைத்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தேன். மேலும் 7 பவுன் தாலிச் செயின், கம்மல் மற்றும் கொலுசு ஆகியவற்றையும் வழங்கினேன். அது மட்டுமின்றி ஷாலினியிடம் ரூ.42 லட்சம் பணம் கொடுத்தேன். அதன் பிறகு ஜிபே மூலமாக ரூ.75 ஆயிரம் அனுப்பி வைத்தேன். ஜஸ்டிஸ், ரேவதி ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி வைத்தேன்.

பிரச்சினை

பணத்தை பெற்றுக் கொண்ட பிறகும் எந்த பிரச்சினையும் தீராததால், நான் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. என்னிடம் பணம்-நகையை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு

மினிஷா மொத்தம் ரூ62 லட்சம் ரொக்கப்பணம், ரூ14 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிகொடுத்ததாக தனது புகாரில் கூறியிருக்கிறார். அவரது புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இரணியல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஷாலினி, ஜஸ்டிஸ், ரேவதி, கிருஷ்ண பிரசாத் ஆகிய 4 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT