முதலமைச்சர் விஜய், ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். மேலும் பல முக்கியக் கோப்புகள் தீவிர விசாரணையில் உள்ளன. இது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அவமானம்.
அமைச்சர் நிர்மல்குமார் கோவை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் பெரும் சமரசம் செய்து கொண்டு, நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளை மிரட்டி சான்றிதழ்களும், கையெழுத்துகளும் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதலமைச்சர் விஜய், ஒரு பைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். மேலும் பல முக்கியக் கோப்புகள் தீவிர விசாரணையில் உள்ளன. இது தி.மு.க.வுக்கு மிகப்பெரிய அவமானம்.
குற்றம் இழைக்காதபட்சத்தில், சட்டரீதியான விசாரணைக்கு எவ்விதத் தயக்கமும் இன்றி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியதுதானே? குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் காணொலிப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து வலுவான ஆதாரங்களும் புலனாய்வுத் தரப்பிடம் உள்ளன.
நள்ளிரவு ஒன்றரை மணி வரை நீதிமன்றத்தில்வாதாடி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை நீதிமன்றக் காவலில் வைக்கவிடாமல் தடுத்துள்ளனர். ஆனால், இதுபோன்ற முறைகேடு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிப்பதே முறையானது என்பது நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட பிற பள்ளி நிர்வாகத்தினரும் பொது மக்களும் அச்சமின்றி எவ்வாறு முன்வந்து புகார்களை அளிக்க முடியும்? கடந்த கால தி.மு.க. ஆட்சியில் சாட்சியம் அளிக்க வந்த அண்ணாநகர் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நிலை என்னவானது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் அச்சமின்றிப் புகார் அளிக்க இத்தகைய சட்ட நடவடிக்கைகள் இன்றியமையாதவை ஆகும்.
அதேபோல், ‘அன்றைக்கே கரூரில் போட்டிருந்தால் இது நடந்திருக்குமா’ என அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் பேசியிருப்பது, அவர்களின் திட்டமிட்ட உள்நோக்கத்தையும் சதியையும் வெளிப்படுத்துகிறது. முன்கூட்டியே திட்டமிடாமல் அவர்களால் இத்தகைய வார்த்தைகளைப் பொதுவெளியில் உணர்ச்சி வசப்பட்டு மட்டும் பேசிவிட முடியாது.
அன்பில் மகேஷ் மீதான நடவடிக்கை அரசியல் பழி வாங்கல் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஆதாரமற்றது. அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கில் செயல்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான சட்டரீதியான தண்டனையை எதிர்கொண்டே தீர வேண்டும்.
மேலும், கோவையில் பிளஸ்-1 பள்ளி மாணவர் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், காவல் துறையினர் எவ்வித வெளி நிர்ப்பந்தமும் அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமாகவும் தீவிரமாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதிகாரிகள் தவறிழைத்திருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தப்பியோடிய கைதிகளில் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.