தற்கொலை 
தமிழக செய்திகள்

ஆவடியில் கடன் தொல்லையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் தொல்லை மற்றும் தந்தையின் பேச்சால் மனவேதனையில் இருந்த மதுமிதா வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் மதுமிதா (வயது19). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடன் வாங்கியதாக கூறி

ஆறுமுகம் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆறுமுகம் தனியாகவும், மகேஸ்வரி தனது மகள் மதுமிதாவுடன் தனியாகவும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ஆறுமுகத்தை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது மகள் மதுமிதாவிடம் கடனை கேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

செல்போன்

இதுகுறித்து மதுமிதா நேற்று மாலை தனது தந்தையிடம் செல்போனில் பேசியபோது தெரிவித்து மனவேதனை அடைந்தார். இதனால் தந்தை-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் செல்ேபான் இணைப்பை மதுமிதா துண்டித்து விட்டார்.

கடன் தொல்லை மற்றும் தந்தையின் பேச்சால் மனவேதனையில் இருந்த மதுமிதா வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த மகேஸ்வரி அறையில் மகள் மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார்.

தற்கொலை

இது குறித்து ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் கடனை திருப்பி கேட்டு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? அவரிடம் கடைசியாக பேசியவர்கள் யார்? என்று விபரங்களை சேகரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT