பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிரு பர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் நூலகத்தில் புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். கடந்த கால தி.மு.க ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது த.வெ.க.வினரும் பெரியார் பெயரை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பெயரைச் சொல்லிச் சொல்லி ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நூலகத்தில் மிகபட பெரிய ஊழல் நடந்துள்ளது. ஏ.ஐ மூலமாகவும் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் ஏன் இதுவரை ஆளுங்கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை?. யார் மீதும் வழக்கும் பதிவு செய்ய வில்லை. ஏன் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது?.
அப்படி என்றால் அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்த நபரே ஊழல் நடந்ததாக தெரிவித்த பின்னரும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தி.மு.க ஆட்சியில் நூல்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தான் நூலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. உண்மையான எழுத்தாளர்களின் புத்தகங்களை தான் வைத்துள்ளார்களா? என்பதை ஆராய வேண்டியது அரசின் கடமை. திரிஷா விஜய் என்ற ஒரு எழுத்தாளர் பெயரிலும் புத்தகம் இருந்ததாக கூறுகிறார்கள். உண்மையிலேயே அந்த பெயரில் புத்தகம் இருந்ததா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் முரணாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் இன்று ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சிக்கியுள்ளார். கடந்த கால ஆட்சியின் போது தி.மு.க.வினர் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்ற விடவில்லை. இதனால் அவர்களது ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் த.வெ.க. உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது. இந்த அரசும் விரைவில் அகற்றப்படும். தமிழகத்தில் ஊழல் அனைத்திலும் பெருகிவிட்டது.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. கடந்த 6 மாதங்களில் மக்களின் மனநிலை வெகுவாக மாறி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் இருக்கிறது. இதனால் தான் சமீபத்தில் 300 அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்யும் திட்டங்களை கொண்டு அரசுடன் நல்லிணக்கம் இருப்பதாக கூற முடியாது. தமிழகத்திற்கு 10 வந்தே பாரத் ரெயில்கள் தூத்துக்குடி மற்றும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தந்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம், எம்.எல்.ஏவை முதன் முதலாக விலைக்கு வாங்கி குதிரை பேரத்தை தொடங்கி வைத்தது. அதன் தொடர்ச்சியாக 2 எம்.எல்.ஏ.க்கள் இழுக்கப்பட்டனர். தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
அம்பை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான எண்ணம் ஏதும் இல்லை. தேர்தல் வரும்போது கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தலைமைக்கு தெரியப்படுத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.
தனுஷ் வருகை குறித்து சொல்ல வேண்டுமென்றால் அவர் பின்னால் பா.ஜனதா இல்லை. யாருக்கு பின்னாலும் நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜனதா ஒரு சுயம்பு. தனித்து இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மிகப்பெரிய கட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.