ஈரோடு மாவட்டம் திண்டல் அடுத்த பெரிய செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜா (45). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர் அணி தலைவராகவும் இருந்து உள்ளார். 2011 ஆம் ஆண்டு ஈரோடு மேற்கு தொகுதியிலும், 2021-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியிலும் மற்றும் 2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனினும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் யுவராஜா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பரபரப்பான தகவல் வெளியான வண்ணம் இருந்தன .
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது :-
கடந்த 25 ஆண்டுகளாக நான் என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலிலிருந்து விலகுவதற்கான முடிவை இன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர் நீங்கள். எனது அனைத்து இன்ப, துன்ப நிகழ்வுகளிலும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தது உங்கள் அன்பும் ஆதரவும் தான்.
தொடர்ந்து இரண்டு முறை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு அளித்ததற்கும், தமிழ் மாநில காங்கிரஸில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்பு வழங்கியதற்கும், அதன் பிறகு மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிக்க வாய்ப்பளித்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்தும் வகையில் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிடும் வாய்ப்பை வழங்கி என் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கும், என்னை ஆதரித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கடந்த 25 ஆண்டுகளில் கட்சிக்காக நான் ஆற்றிய பணிகள், மேற்கொண்ட போராட்டங்கள், சந்தித்த வெற்றிகளும் தோல்விகளும் அனைத்தும் என் வாழ்க்கையின் பொக்கிஷமான நினைவுகளாகவே இருக்கும். அந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கும், நம்பிக்கை வைத்ததற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் அமைப்பை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல. குறிப்பாக என் இளமைப் பருவம் முதல் என் வாழ்வின் முக்கியமான காலகட்டங்களை இணைத்துக் கொண்ட கட்சியிலிருந்து விலகுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார் .
சமீபத்தில் யுவராஜா சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சரமான புஸ்சி ஆனந்தை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து யுவராஜா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது.
இதுகுறித்து யுவராஜா தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வராத நிலையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தான் வசிக்கும் பொதுச் செயலாளர் பதவி உட்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி இருப்பது ஈரோடு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .