தமிழக செய்திகள்

சமூக வலைதளங்களில் மீண்டும் களமிறங்கினார்: ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்ட யூடியூபர் மதுமிதா

மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 6,720 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவரை 4,86,000 பேர் பாலோ செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் மீண்டும் களமிறங்கிய மதுமிதா, ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமையல் மற்றும் குடும்ப நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்த வீடியோக்கள், 20 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளன. அவரது ஆடம்பரமான உடைகள் மற்றும் பேசும் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மதுமிதா(வயது 28). பிரபல யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, தனது சிறிய மகளின் மீது ரூபாய் நோட்டுகளை கொட்டுவது, அதிக நகைகளை அணிந்திருப்பது போன்று ஏராளமான “ரீல்ஸ் வீடியோக்கள்” எடுத்து வெளியிட்டார்.

118 பவுன் நகைகள் கொள்ளை

அவரது வீடியோக்களை ஏராளமானோர் பார்த்தனர். மேலும் சமூகவலைதள பக்கங்களில் அவரை பினதொடர்ந்தனர். இதனால் மதுமிதா இன்ஸ்டாகிராமில் பிரபலமானார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி மதுமிதாவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அவரது வீட்டில் இருந்த 118 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மதுமிதா வீட்டில் கைவரிசை காட்டியவர்கள் சிக்கினர். மதுமிதா வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கி பாண்டி உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராமில் மதுமிதா வெளியிட்டிருந்த வீடியோக்களை பார்த்துதான் கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதே நேரத்தில் மதுமிதா தன்னுடன் பணியாற்றியபோது தன்னை ஏமாற்றி நகைகளை பறித்துக்கொண்டதாக காண்டிராக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ரீல்ஸ் வீடியோக்கள்

வீட்டில் திருட்டு நடந்தது மற்றும் பாளையங்கோட்டை போலீசார் நகைபறிப்பு வழக்கு பதிவு செய்தது உள்ளிட்ட சம்பவங்களால் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ரீல்ஸ் வீடியோக்கள்” பதிவிடுவதை சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார்.

​இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி மதுமிதா மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ரீல்ஸ் வீடியோக்கள்” வெளியிட தொடங்கினார். தனது குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்ட அவர், “என்னை பற்றி பேசினால் நான் உயர்ந்து கொண்டேதான் செல்வேன். என்னை வீழ்த்த நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நடக்காது” என்று பேசியிருந்தார்.

​இதன் தொடர்ச்சியாக மதுமிதா நேற்று ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராமில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோக்களில் பெரும்பாலானவை சமையல் தொடர்பானவை ஆகும். அவற்றில் ஒரு வீடியோ மதுமிதா தனது குழந்தையுடன் சமையலறையில் மீன் குழம்பு தயார் செய்வது எப்படி? என்பது தொடர்பானது ஆகும்.

அந்த வீடியோக்களை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அவர் அந்த வீடியோவை வெளியிட்ட 20 மணி நேரத்திற்குள், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர் பேசும் ஸ்டைல் மற்றும் ஆடம்பரமான அழகிய உடைகள் உள்ளிட்ட விஷயங்களால் அவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களை பலரும் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.

மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 6,720 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அவரை 4,86,000 பேர் பாலோ செய்து வருகின்றனர். ஆனால் அவர் யாரையும் பாலோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT