மதுரை பிரபல நகைக்கடையில் ரூ.25 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் முகமூடி அணிந்த நபர் நகைகளை சாமர்த்தியமாக திருடியதாக தெரியவந்தது. வடமாநில இளைஞர்கள் மீது சந்தேகத்துடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் நுழைவு பகுதியில் 3 தளங்களுடன் பிரபல டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகைக்கடை கடந்த தீபாவளியை முன்னிட்டு திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் இன்னும் முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் முதல் தளத்தில் தங்க நகைகளும், 2-வது தளத்தில் வைர நகைகளும், 3-வது தளத்தில் வெள்ளி பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டிடத்தின் பின் பகுதியில் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு லிப்ட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல விற்பனை முடிந்து அனைவரும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வைரம் மற்றும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த ஷோகேஷ்கள் திறக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் நகைகள் வைத்திருந்த பாக்ஸ்கள் ஆங்காங்கே சிதறியும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதுரை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 15 முதல் 20 கிலோ வரை தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடி வரை இருக்கும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது உடல் முழுவதும் கருப்பு துணிகளால் கட்டிய நிலையில் முகமூடி மற்றும் கையுறை அணிந்த ஒரு நபர் பின்பக்க இரும்பு சாரம் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து லிப்ட் அமைப்பதற்கான பள்ளத்தில் இறங்கி நகைகள் இருந்து அறைக்குள் புகுந்து லாவகமாக ஒரு டிராவல் பேக்கில் அனைத்து நகைகளையும் அள்ளிக்கொண்டு சென்றது தெரிய வந்தது.
அந்த நபரின் முகம் தெரியாததால் அவரது உருவ அமைப்பினை பல்வேறு கோணங்களில் போலீசார் வரைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். இதற்காக அங்கு பணிபுரிந்து வரும் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வரவழைத்து போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகப்படும் சிலரிடம் மீண்டும் மீண்டும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் நகைக்கடை கட்டுமான பணி மற்றும் ஷோகேஷ் வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேக பார்வை ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர் அதிகாலை 3 மணிக்கு உள்ளே புகுந்து எவ்வித பதட்டமோ, அச்ச உணர்வோ இன்றி சுமார் ஒரு மணி நேரம் முதலாவது மற்றும் 2-வது தளங்களில் உள்ள தங்கம், வைர நகைகளை அதற்குரிய கண்ணாடி பாக்ஸ்களை உடைக்காமல் சாமர்த்தியமாக திறந்து கொள்ளையடித்துள்ளான்.
எனவே இந்த தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு தான் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கும் என்று போலீசார் உறுதியாக தெரிவித்தனர். எனவே இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில இளைஞர்களிடம் கொள்ளை சம்பவம் குறித்து தொடர்நது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விலை உயர்ந்த வைர, தங்க நகைகள் அலார வசதியுடன் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அதனை தொடாமல் அலாரம் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் குறி வைத்து கொள்ளையன் தனது திட்டத்தை கச்சிதமாக முடித்து தப்பியுள்ளான்.
எனவே இந்த சம்பவத்தில் சுமார் 5 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகை கடையில் நடந்து வரும் கட்டுமான பணிகள் மற்றும் ஷோகேஷ் உள்ளிட்ட அலங்கார பணிகளில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை குறிவைத்தே போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 9-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் போலீசார் இது தொடர்பாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக வடமாநில இளைஞர்கள் 15 பேரை விசாரணை வளையத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே இந்த நகைக்கடையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னரே கொள்ளை முயற்சி நடந்ததாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவான காட்சிகளை பார்ப்பதற்காக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மர்மநபர் இந்த கடையில் ஏற்கனவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளதால் அந்த நபர் தான் நேற்று முன்தினமும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வேறு நபர்கள் மூலம் வெளியிடங்களுக்கு கடத்தியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது தவிர விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர் கொள்ளையடித்த நகைகளுடன் வெளி மாநிலத்திற்கு தப்பி விட்டாரா? என்ற கோணத்திலும் வடமாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை துரிதப்பட்டுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தையே பெரும் பரபரப்பாக்கி உள்ள இந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கொள்ளையன் பற்றிய முழு விபரமும் தெரியவரும். கொள்ளை போன நகைகளும் மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.