தமிழக செய்திகள்

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!

என்மீதான வழக்கைப் போலீசார் ரத்துசெய்ய வேண்டும்.

கடந்த வாரம் பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவசர வேலை காரணமாக அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஆகாஷ் என்பவர் வழிவிடுவாறு அங்கு இருந்த விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரகீம் என்பவர் இளைஞரிடம் சென்றுப் பேசியுள்ளார்.

அப்போது காவலர் இளைஞரின் கன்னத்தில் அடிக்க, உடனே சற்றும் தாமதிக்காமல் இளைஞரும் காவலர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து அவர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருநாள் சிறைக்கு பின் அவரை விடுவித்திருந்தனர். இந்நிலையில் காவலரை அறைந்ததால் தனது பணி போய்விட்டதாக இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் ஒரு பிறந்தநாள் பேனரை அகற்றியதற்காக விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் நாங்கள் இருவரும் (போலீசார்) பாதிக்கப்பட்டுள்ளோம்.

என்மீதான வழக்கை போலீசார் ரத்துசெய்யவேண்டும், காவலர் ரகீம் மீதான வழக்கையும் ரத்துசெய்யவேண்டும். போலீசாரை அடித்ததால் என் வேலை போய்விட்டது. எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கின்றன. எனக்கு ஏதேனும் வேலை வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும். மாற்றம் வேண்டும் என்பதற்காக நானும் தவெகவிற்குதான் வாக்களித்தேன்.” என தெரிவித்துள்ளார்.