தமிழக செய்திகள்

ஒரு வாரத்தில் திருமணம்: விபரீத முடிவு எடுத்த வாலிபர்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஞானப்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஈரோடு மாமரத்துப்பாளையம் ஸ்ரீ சக்தி நகரை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (29). ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள டிரேடர்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கரூரைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணை வரும் 25ஆம் தேதி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி வழக்கம் போல் ஞானபிரகாஷ் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஈரோடு நாராயணவலசு திருமால் நகரில் ஒரு வீட்டு முன்பு மயங்கி கிடப்பதாக அவரது தந்தைக்கு தகவல் வந்தது. அங்கு சென்று ஞானப்பிரகாசத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஞானபிரகாஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஞானப்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.