சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (18) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் தந்தை மற்றும் அவரது நண்பர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனுஷின் அண்ணனான சிலம்பரசனுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்கனவே பலமுறை முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூர்யா தனது நண்பர்களுடன் சென்று சிலம்பரசனைத் தாக்குவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டிருந்த சிலம்பரசனைத் தாக்காமல் அந்தக் கும்பல் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி அன்று இரவு சுமார் 11.30 மணியளவில், வியாசர்பாடி எஸ்.எம். நகர் 58-வது பிளாக்கில் சிலம்பரசன் தனது தம்பி தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சூர்யா, அவரது தந்தை மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், பட்டாக்கத்தியால் சிலம்பரசன் மற்றும் தனுஷைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து சிலம்பரசன் தப்பியோடிய நிலையில், அவரது தம்பி தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர், தனுஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து எம்.கே.பி. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.