தமிழக செய்திகள்

காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் கூறிய வாலிபர் வெட்டிக் கொலை- டிடிவி தினகரன் கண்டனம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?

புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன?

சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

“சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச்சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன?

எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT