தமிழக செய்திகள்

யானை தாக்கி வாலிபர் உயிரிழப்பு

காட்டு யானை புதருக்குள் இருந்து வெளியே வந்தது. இந்த யானையை பார்த்து பிரவீன் அதிர்ச்சி அடைந்தார்.

கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பாட்டியை பார்ப்பதற்காக நடந்து சென்ற வாலிபரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் மத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் பிரவீன் (வயது 35). இவரது பாட்டி கோத்தகிரி அடுத்த கூக்கல்தெரை இந்திரா நகரில் வசித்து வந்தார்.

யானை தாக்கியது

இந்த நிலையில் பிரவீன் கோத்தகிரியில் வசிக்கும் பாட்டியை பார்த்துவிட்டு திரும்புவது என்று முடிவு செய்தார். அதன்படி இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன்பிறகு கூக்கல்தெரை-கம்பட்டிகம்பை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு காட்டு யானை புதருக்குள் இருந்து வெளியே வந்தது. இந்த யானையை பார்த்து பிரவீன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.

வாலிபர் உயிரிழப்பு

இருந்தபோதிலும் அந்த யானை பிரவீனை சுற்றி வளைத்து ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதற்கிடையே கூக்கல்தெரை-கம்பட்டிகம்பை ரோட்டுக்கு தற்செயலான வந்த பொதுமக்கள் சாலையோரம் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதையும், அருகில் யானையின் காலடித்தடங்கள் இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வனத்துறை

பின்னர் அவர்கள் இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். இதில் அவர் மேட்டுப்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பதும், கோத்தகிரியில் வசிக்கும் பாட்டியை பார்ப்பதற்காக கூக்கல்தெரை சாலை வழியாக வந்தபோது யானை தாக்கியதில் பலியானதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் யானை தாக்கியதில் பலியான பிரவீன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூக்கல்தெரை-கம்பட்டி கம்பை சாலை வழியாக இரவு நேரத்தில் சென்ற பிரவீனை காட்டு யானை தாக்கி கொன்றதா என்பது குறித்து வனத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பாட்டியை பார்ப்பதற்காக நடந்து சென்ற வாலிபரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூக்கல்தெரை பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் வெளியே சென்று திரும்ப பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கூக்கல்தெரை பகுதியில் யானைகளின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வனத்துறையினர் மாலை நேரம் முதல் அதிகாலைவரை எல்லையோர வன கிராமப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SCROLL FOR NEXT