தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார்.
பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த இளைஞர் மேற்கொண்டுள்ள இந்த நூதன முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பனை மரத்தைத் தேர்ந்தெடுத்த தினகர், அதற்குப் பிரத்யேகமாக இரும்பு படிக்கட்டுகளை வடிவமைத்துள்ளார்.
இரும்பு கம்பிகளைக் கொண்டு, மரத்தைச் சுற்றிலும் வளைவு வடிவில் பாதுகாப்பான முறையில் இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படிக்கட்டுகளின் வழியாக மிகவும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பனை மரத்தின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும்.
இதற்காக அந்த இளைஞர் தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
நவீனத் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும், அழியாமல் இருக்கும் தங்களது பாரம்பரியப் பனைத் தொழிலைக் கைவிடாமல், அதனைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் தினகர் செய்துள்ள இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பரவிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
"அறிவியல் வசதிகளைப் பயன்படுத்திப் பாரம்பரியத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்கு இந்த இளைஞரின் முயற்சியே சாட்சி" என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.