சென்னை தி.நகரில் நட்சத்திர ஓட்டல் ஊழியரான வடமாநில வாலிபரை வழிமறித்து, தாக்கிப் பணம் பறித்த வழக்கில் 19 வயது வாலிபர் மற்றும் இரண்டு சிறுவர்களைப் பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரோகன்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து அவர் தங்கியிருந்த விடுதிக்கு நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தி.நகர், ராஜமன்னார் தெருவில் வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், ரோகன்ராஜைக் கையால் தாக்கி, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ.1,500 ரொக்கம் மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவற்றை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு பின்வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பிடிக்கப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளிடமிருந்து செலவு செய்தது போக மீதமிருந்த ரூ.300 பணம் மற்றும் குற்றச் செயலுக்கு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.